அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, April 6, 2010

தமுமுகவினர் பைக் பேரணி

காரைக்கால், ஏப். 4 : புதுவையில் இஸ்லாமியர்களுக்கு 2.5 சத தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி, காரைக்காலில் தமுமுகவினர் சீருடையுடன் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதுபோல முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 2.5 சத தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட தமுமுகவினர் ஞாயிற்றுக்கிழமை சீருடை அணிந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

மாவட்ட எல்லையான வாஞ்சூரில் புறப்பட்ட பேரணிக்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ். யூசுப்கான் தலைமை வகித்தார். திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.எம்.சி. சிவக்குமார் பேரணியை தொடக்கிவைத்தார்.

பேரணி தொடக்கத்தில் மாவட்டச் செயலர் ஐ.அப்துல் ரஹீம் பேசியது:

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம் சமுதாயத்தினர் பின்தங்கியிருப்பதை சுட்டிக்காட்டி தமுமுக கடந்த 2005-ம் ஆண்டு முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாக கடந்த 5.8.2009-ல் புதுச்சேரி சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்கு 2.5 சத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் வி.வைத்திலிங்கம் அறிவித்தார்.

ஆனால், 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. நிகழாண்டு நிதிநிலை அறிக்கையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவிப்பு செய்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார்.

எனவே, இம்மாத இறுதிக்குள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.

பேரணியில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். வாஞ்சூரில் தொடங்கி திருப்பட்டினம், நிரவி, காரைக்கால், திருநள்ளாறு, சேத்தூர், அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கண்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி வழியாக காரைக்காலில் பேரணி நிறைவு பெற்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP