மனிதநேய மக்கள் கட்சி - காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மனிதநேய மக்கள் கட்சி - காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் A.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.ஷேக் அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் S.யூஸூப் கான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் I.அப்துல் ரஹீம், B.ஷாஜகான் மாவட்ட துணை செயலாளர் M.E.ஹாஜா நஜிமுதீன் மாவட்ட அணி செயலாளர்கள் M.R.சாதிக், S.நியாஜ் அஹமது, H.M.இக்பால், M.முஹமது ஜியாவுதீன், E.M.சபுருதீன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் M.முஹமது நஜிமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரயில்வே நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
காரைக்காலில் இருந்து ரயில் போக்குவரத்து செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கப்படும் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குண்டான முழு வீச்சில் பணிகள் நடைபெறாததால் ரயில் போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. எனவே தெற்கு ரயில்வே முழு வீச்சில் பணிகளை முடிக்கி விட்டு நடப்பு அக்டோபர் மாதத்திலேயே ரயில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்பொழுது காரைக்காலில் இருந்து புறப்படும் ரயில்கள் பற்றிய அறிவிப்பில் சென்னை மற்றும் எர்னாகுளம் ரயில்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான புறப்படும் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் ரயில் நேரம் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்றடையும் என்றும் மறு மார்க்கத்தில் இரவு 11.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு மறுநாள் காலை 10 மணிக்கு வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் காரைக்காலில் இருந்து எர்னாகுளம் செல்லும் ரயில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 3.25 மணிக்கு செல்லும் என்றும் மறுமார்க்கத்தில் எர்ணகுளத்தில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.20 மணிக்கு காரைக்கால் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 2 ரயில்களும் காரைக்கால் வந்தடையும் நேரங்கள் காலை 10 மணி மற்றும் 12 மணி என்று இருப்பதால் அன்று பல்வேறு பணிகள் செய்பவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் பாதிக்கபடும் சூழ்நிலை ஏற்படும். எனவே, மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு காரைக்காலுக்கு ரயில்கள் வரும் நேரத்தை காலை 7 மணிக்குள் வருமாறு மாற்றியமைக்க வேண்டுமென தெற்கு ரயில்வேயை மனிதநேய மக்கள் கட்சி கேட்டுகொள்கிறது.
வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மற்றும் தூர்வார வேண்டும்.
காரைக்காலில் உள்ள பெரும்பாலான வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டும் மற்றும் தூர் வாரபடாமலும் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் ஓட வழியில்லாமல் நகருக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உள்ளது. ஆகவே காரைக்கால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால் அடிப்படையில் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காயல்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மற்றும் தூர்வார வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டுகொள்கிறது.
உள்ளாட்சித்துறை இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் தனி அதிகாரி நியமிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர்களின் பதவி காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தனி அதிகாரி நியமிக்கப்படாமல் உள்ளது. தனி அதிகாரி நியமிக்கப்படாமல் உள்ளதால் நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்துகளின் பல்வேறு மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்துகளை இயக்கி வரும் புதுச்சேரி உள்ளாட்சித்துறையில் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களும் இல்லாமல் உள்ளாட்சித்துறை நிர்வாகம் முடங்கிபோய் உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு போர்க்கால் அடிப்படையில் நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கவும் மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குநர், இணை இயக்குநர்களை நியமிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுகொள்கிறது.
தினத் தந்தியில் வந்த நியூஸ் இங்கே Click செய்யவும்.