நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் வழங்கப்படும் திருமண சான்றிதழ் ஒரே மாதிரியாக வழங்கப்படவேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை
புதுச்சேரி மாநிலத்தில் திருமண பதிவுகள் நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்துகளில் French Civil Code படி பிரெஞ்ச் மொழியில் பதியப்பட்டு வருகிறது. அதுபோல் Special Marriage Act மற்றும் Hindu Marriage Act படி Registrar அலுவலகத்தில் பதியப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் தங்களின் வசதிக்காக நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்துகளிலேயே திருமணத்தை பதிவு செய்கின்றனர்.
நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்துகளில் திருமண பதிவுகள் பிரெஞ்ச் மொழியில் பதியப்பட்டு வருவதால், காரைக்கால் பகுதியில் உள்ள 5 கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் திருமண சான்றிதழ் வழங்குபோது பணி (Profession) காலத்தில் திருமண பதிவேட்டில் உள்ளதுபோல் வேலையை பிரெஞ்ச் மொழியிலேயே எழுதி தருகின்றனர். பிரெஞ்ச் மொழியில் வேலையை எழுதி தருவதால் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் மற்ற அரசு அலுவலகங்களில் வேலையை என்னவென்று புரியாமல் குழம்புகின்றனர். ஆனால், காரைக்கால் நகராட்சியில் பணி (Profession) காலம் இல்லாமல் திருமண சான்றிதழ் கொடுக்கின்றனர். அதுபோல் மணமக்களின் பிறந்த தேதியினை திருமண பதிவேட்டில் ஆரம்பத்திலிருந்து பதிவு செய்வதே கிடையாது, தற்பொழுது ஒரு சில நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்துகளில் மணமக்களின் பிறந்த தேதியினை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். திருமண பதிவுக்கென்று நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஒரே மாதிரியான சான்றிதழ் கிடையாது.
ஆகவே, புதுச்சேரி மாநில உள்ளாட்சி இந்த விஷயத்தில் முழுமையாக தலையிட்டு பிறப்பு மற்றும் இறப்புக்கு ஒரே மாதிரியான சான்றிதழ் இருப்பதுபோல், திருமண சான்றிதழுக்கும் அனைத்து நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் ஒரே மாதிரியான சான்றிதழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அந்த திருமண சான்றிதழில் பணி (Profession) காலத்தை எடுத்துவிடவும், மணமக்களின் பிறந்த தேதியை திருமண பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டுமெனவும் நகராட்சி / கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிடவேண்டுமெனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.