மார்ச் 28: விவசாயிகளின் முழு அடைப்பை காரைக்காலில் வெற்றிபெறச் செய்வோம்!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்
"""""""""''''''''''''''''''''''''"""""""""""""""""""""""""""""""""
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நைனா முஹம்மது வெளியிடும் அறிக்கை:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இரண்டு அணைகளைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான காவிரி நீர் தடுத்து நிறுத்தப்படும் அபாயமும், இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும். நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 கோடி தமிழக மக்களின் இயற்கை உரிமை பறிக்கப்படும் நிலை தடுக்கப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.
இவ்விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வரும் நிலையில் கர்நாடக அரசு கடந்த13.03.2015 அன்று, சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், காவிரியின் குறுக்கே அணை கட்டுமானப் பணிக்கு முதல் கட்டமாக ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்து, அணையை கட்டியே தீருவோம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 21.03.2015 அன்று சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு கூட்டத்தில், கர்நாடக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 28.03.2015 அன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டுள்ளது.
அந்நாளில் காரைக்கால் மாவட்ட வணிகர்கள் வணிக நிறுவனங்களை அடைத்தும், விவசாயிகள் வேலைகளைப் புறக்கணித்தும், தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளை நிறுத்தியும், வாகன உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களை இயக்காமலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவித்தும் இப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்து, தமிழர்களின் ஒற்றுமையை கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பறைசாற்ற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இவண்
எம்.நைனா முஹம்மது,
காரைக்கால் மாவட்ட செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி