அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, June 13, 2015

பாஸ்போர்ட் விசாரனைக்கு காவல்நிலையத்திற்கு பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அழைக்கக்கூடாது - புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, ஷாஜஹான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லியாக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாஸ்போர்ட் விசாரனைக்கு காவல்நிலையத்திற்கு பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அழைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த கடிதத்தை புதுச்சேரி முதல் அமைச்சருக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மேற்படிப்புக்காகவும், வெளிநாட்டில் வேலை செய்வதற்கும், பெண்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் கணவருடன் சென்று வெளிநாட்டில் தங்குவதற்காகவும், சுற்றுலா செல்வதற்காகவும், அதுபோல் புனிதப்பயணமாக இஸ்லாமியர்கள் மெக்கா செல்வதற்கும், கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்வதற்கும் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்கின்றனர். அதுபோன்று விண்ணப்பித்துள்ள நபர்கள் மீது வழக்கு இருக்கிறதா? என விசாரணை செய்து அறிக்கை அனுப்புமாறு புதுச்சேரி மற்றும் காரைக்கால் காவல்துறை கண்காணிப்பாளருக்கு சென்னையில் உள்ள  பாஸ்போர்ட் அலுவலகம் தகவல் கோருகிறது. அதனடிப்படையில் காவல்துறை சம்பந்தப்பட்ட மனுதாரர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை செய்து, அதன் அறிக்கையை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திக்கு அனுப்பி வைக்கிறது. இது நடைமுறை வழக்கம்.

ஆனால், காவல்துறையினர் விண்ணப்பித்துள்ள நபர்களை வீடுகளில் சென்று விசாரிக்காமல், காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்கின்றனர். அதுபோல் பெண்கள் மற்றும் சிறுவர்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்கின்றனர். மேலும், காவல்நிலையத்தில் விசாரணைக்காகவும், குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே பாஸ்போர்ட் விசாரணைக்காக வரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அமரவைக்கப்படுகிறார்கள். இந்த செயல் பெண்களையும் மற்றும் குழந்தைகளையும் மனதளவில் பாதிக்கவைக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சென்ற 23.04.2013 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேரா. M.H.ஜவாஹிருல்லாஹ், M.L.A அவர்கள் பேசியதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல் அமைச்சர் அவர்கள் "Cr.P.C சட்டத்தின்படி பெண்களையும், குழந்தைகளையும் சாட்சியாக விசாரணை செய்யக்கூட காவல்நிலையத்திற்கு அழைக்கக்கூடாது, அவர்களை அவர்களது இருப்பிடத்திற்கு சென்றுதான் விசாரிக்க வேண்டும். எனவே, பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்க தேவையில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால், அது விசாரிக்கப்பட்டு, இதுபோன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்பதை தெரிவத்து கொள்கிறேன்" என்று கூறினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்களும், சிறுவர்களும் மற்றும் குழந்தைகளும் காவல்நிலையத்திற்கு அழைக்கப்படாமல் வீடுகளுக்கு சென்றே விசாரணை செய்கின்றனர்.

ஆகவே, புதுச்சேரி மாநிலத்திலும், பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை காவல்நிலையத்திற்கு அழைக்கக்கூடாது, அவரவர் வீடுகளுக்கு சென்று விசாரணை செய்து அறிக்கையை அனுப்ப வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP