மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
First Published : 05 Nov 2009 11:13:00 PM IST
Last Updated :
காரைக்கால், நவ. 4: காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத, புதுவை அரசைக் கண்டித்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில், ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் அப்துல் நாசர் தலைமை வகித்தார்.
காரைக்கால் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற தமிழக மக்கள் ஆர்வத்துடன் வந்த காலம் மாறி, உள்ளூர் மக்களுக்கே சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை உள்ளது.
போதுமான மருத்துவர்கள் இல்லை, பல்வேறு துறைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை, ஊழியர்கள், மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. சி.டி. ஸ்கேன் எடுப்பதற்கு தொழில்நுட்ப வல்லுநர் கிடையாது. அவசரச் சிகிச்சைக்கு தஞ்சை, புதுச்சேரிக்கு பரிந்துரைக்கும் நிலையை உள்ளது.
ஆனால், புதுவை சுகாதாரத் துறை இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறது. மாநில அரசின் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டச் செயலர் லியாகத் அலி, துணைச் செயலர்கள் ஹாஜா நஜிமுதீன், அம்புரோஸ் அருள்ராஜ், தமுமுக மாவட்ட செயலர் அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் பேசினர்.
முடிவில் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கந்தசாமியை சந்தித்து, மருத்துவமனையில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.