திருநள்ளாரில் - காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஒரு முதலுதவி ஆரம்ப சுகாதார நிலையமாகவே செயல்பட்டு வருவதால் அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தொடர்ந்து தஞ்சாவூர் அல்லது புதுச்சேரிக்கு அனுப்பப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள CT Scan மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் செயல்படுத்த தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும், அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் புதுச்சேரி அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து கொண்டு இருக்கின்ற மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காமல் புதிதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது. எனவே இருக்கின்ற காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்ப காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்து கையெழுத்து இயக்கத்தை காரைக்காலில் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருநள்ளார் கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் திருநள்ளார் கடை தெருவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மனிதநேய வணிகர் சங்க பொருளாளர் முகமது இப்ராஹீம், மாவட்ட செயலாளர் நெய்னா முகமது, தமுமுக மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, காரை நகர தலைவர் முகமது சாதிக், நகர செயலாளர் அப்துல்லாஹ், நிரவி கிளை தலைவர் யூனுஸ், செயலாளர் ஹமீது சுல்தான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநள்ளார் கிளை தலைவர் நூருல் அமீன் தலைமையில், கிளை தமுமுக செயலாளர் முகமது பைசல், தமுமுக துணை செயலாளர் முகமது பைசல், ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மமக கிளை செயலாளர் அவுலியா முகமது என்ற கனி நன்றி கூறினார்.