வேறு மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு குடியேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கல் சான்றிதழ் கட்டாயமில்லை புதுவை மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு. - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை ஏற்பு.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், 2013 ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் செய்வது தொடர்பாக, சென்ற ஆண்டு காரைக்காலில் விண்ணப்பம் பெறப்பட்டது. அந்த விண்ணப்பத்தில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரத்தை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிப்பதற்காக மூன்றாவது பக்கத்தில் விபரங்கள் உள்ளது. ஆனால், அதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை பதில் தரவில்லை. மேலும், பெயர் சேர்த்தல் விண்ணப்பதாரர்களின் பல பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
காரணம் கேட்டால், தமிழகத்திலிருந்து திருமணம் செய்தும், இடம் பெயர்ச்சி காரணமாகவும் காரைக்காலுக்கு குடி பெயர்ந்தவர்களை சேர்ப்பதற்கு, அவர்கள் முன்பு குடியிருந்த ஊர்களில் உள்ள தேர்தல் அதிகாரியிடமிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற சான்று வாங்கி வந்தால் மட்டுமே சேர்க்கமுடியும் என மாவட்ட தேர்தல் துறை கட்டாயமாக கூறியது. இதனை தமிழக தேர்தல் அதிகாரிகளிடம் கூறினால், அவ்வாறு எந்தவித சான்றும் கொடுக்கமுடியாது. இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் துறை விதிமுறைகள்தான். புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் நாங்கள் அவ்வாறு எந்தவித சான்றும் கேட்கவில்லை. அப்படியிருக்க, காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மட்டும் அவ்வாறு கேட்பது ஏன் என்று புரியவில்லை என கூறிவிட்டனர்.
தமிழகத்திலிருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு குடியேறி பல ஆண்டுகள் ஆகியும், காரைக்கால் மாவட்ட ரேஷன் அட்டை, கேஸ் அட்டை, ஆதார் கார்டுகள் என பலவற்றை பதிவு செய்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் பல வாக்காளர்கள் பல ஆண்டுகளாக இருப்பது வேதனையானது. எனவே, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி இந்த விசயத்தில் உடனே தலையிட்டு, வேறு மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு குடியேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கல் சான்றிதழ் கட்டாயமில்லை என்று அறிவிக்க வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது, மேலும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் வேறு மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு குடியேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கல் சான்றிதழ் கட்டாயமில்லை என்றும், வாக்காளர் பெயரை பதிவு செய்வதற்கு அவர்கள் முன்னர் வசித்த இடத்திலிருந்து நீக்கல் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு புறம்பானது. எனவும் புதுவை மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.