காஜியார் மூலம் பதியப்படும் திருமண பதிவேடுகளை அலுவலகம் அமைத்து பரமாரிக்க வேண்டும் - தமுமுக கோரிக்கை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், தலைமை செயற்குழு உறுப்பினர் நைனா முஹம்மது, மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அப்துல் நாசர், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் முஹமது ஹசனுதீன், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க பொருளாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க பொருளாளர் முஹம்மது இப்ராஹிம், நகர தலைவர் ஜெகபர் சாதிக் உட்பட காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாவட்டம், நகரம் மற்றும் கிளைகளில் உள்ள மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானங்கள்
டிசம்பர் 6 - காரைக்காலில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
1. பாப்ரி மஸ்ஜித் வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க கோரியும்,பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றும் பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் வரும் டிசம்பர் 6 அன்று காரைக்காலில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
காஜியார் மூலம் பதியப்படும் திருமண பதிவேடுகளை அலுவலகம் அமைத்து பரமாரிக்க வேண்டும்
2. காரைக்கால் மாவட்டத்தில் குறிப்பாக காரைக்கால் நகரில் காஜியார் மூலம் பதிவு செய்யப்படும் திருமண பதிவேடுகள் தற்பொழுது பதவியில் உள்ள காஜியார் வசமும், இதற்கு முன்பு பதவியிளுருந்து விலகிய காஜியார் வசமும் அல்லது இறந்து போன காஜியார் வீடுகளிலேயே அந்த குடும்பத்தாரின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இதனால் திருமண பதிவேடுகள் தேவைபடுவோர் அலைக்கழிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, புதுச்சேரி வக்பு வாரியம் இந்த விஷயத்தில் தலையிட்டு இதுவரை பதியப்பட்டுள்ள திருமண பதிவேடுகள் மற்றும் தற்பொழுது பதியப்பட்டு வரும் திருமண பதிவேடுகள் அனைத்தையும் காரைக்கால் பகுதியில் உள்ள வக்பு நிர்வாக சபை இயங்கிவரும் அலுவலகத்திலேயே தனியாக ஒரு அலுவலகம் அமைத்து பராமரித்தும், மேலும் அனைத்து திருமண பதிவேடுகளையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டுமெனவும் புதுச்சேரி அரசை தமுமுக கேட்டு கொள்கிறது.
புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்
3. புதுச்சேரியில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு அரசு வழங்கியுள்ள 2 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், அதனை ஏ,பி,சி,டி என அனைத்து பிரிவிற்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என புதுச்சேரி அரசை த.மு.மு.க கேட்டு கொள்கிறது.



