புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் அறிவித்த ஆதார் நம்பரை ரேஷன் அட்டையில் இணைக்க இணையதளத்தில் பதிவு செய்யும் முறை இருக்கிறதா ? இல்லையா ? புதுச்சேரி அரசு விளக்க - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி குடும்ப உணவு பங்கீட்டு அட்டையில் (Ration Card) உள்ள அனைத்து நபர்களுக்கும் அவரவர் ஆதார் எண்னை பதிவு செய்வதற்காக ரேஷன் கடையில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையின் நகலை ஒப்படைக்க வேண்டும் என புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை நேரடியாக பதிவு செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது எனவும், அதன்படி www.dcsca.puducherry.gov.in இணையதளத்தில் சென்று ரேஷன் கார்டு நம்பரை கொடுத்து அதில் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் நம்பரையும் சம்பந்தப்பட்ட குடும்ப நபர்களே பதிவு செய்து கொள்ளும் முறையையும் அறிவித்து, ஆதார் நம்பரை பதிவு செய்வதற்கு புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையதளத்தில் அதற்கென ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் நேரடியாக ஆதார் எண்ணை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காரைக்காலில் உள்ள ஒரு சில ரேஷன் கடைகளில் இணையதளத்தில் பதிவு செய்தாலும் ரேஷன் கடையிலும் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் ஆதார் நகலை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் பொங்கல் பொருட்கள் மற்றும் எந்த பொருளும் வழங்க முடியாது என நுகர்வோர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்த செயல் புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் அவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக உள்ளது. இயக்குனரின் அறிவிப்பை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஏற்று கொள்ளவில்லையா ? அல்லது இயக்குனரின் அறிவிப்பு புதுச்சேரிக்கு மட்டுமா?
எனவே, இணையதளத்தில் ஆதார் எண்களை பதிவு செய்யலாமா ? என்பதையும் அல்லது பதிவு செய்யலாம் என்றால் அதனை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மக்களை அலைகழிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், இதுவரை திருப்பி அனுப்பப்பட்ட அனைத்து ரேஷன் கார்டுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.
அதோடு, இந்த தகவல்களை காரைக்கால் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை இணை இயக்குனர் அவர்கள் பத்திரிக்கையின் மூலம் மக்களுக்கு விளக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.