பத்திரிக்கையாளர் சந்திப்பு - 09.03.2015 - M.H.ஜவாஹிருல்லாஹ், M.L.A
மனிதநேய மக்கள் கட்சியின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ், M.L.A அவர்கள் காரைக்காலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியதாவது, இச்சந்திப்பின்போது மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் நைனா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட துணை செயலாளர்கள் ஷாஜஹான், சாதிக் அலி, தமுமுக மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், தமுமுக மாவட்ட துணை செயலாளர் அப்துல் காசிம் உட்பட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதுச்சேரி மாநிலம் என்றவுடன் நினைவுக்கு வரும் வகையில் புதுச்சேரி மாநிலத்தை ஆக்கிரமித்து, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவர்களை குடிக்கு அடிமையாக்கி பல குடும்பங்களை வீதியில் நிறுத்திய மதுவை புதுச்சேரி மாநிலத்தில் முழுமையாக தடை செய்து, புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி புதுச்சேரி அரசை கேட்டு கொள்கிறது.
புதுச்சேரியில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைக்க வேண்டுமென்று எனது தலைமையில் புதுச்சேரி முதல் அமைச்சர் அவர்களை சட்டமன்ற அலுவலகத்தில் நேரில் சென்று வைத்த எங்களது கோரிக்கையை ஏற்று சிறுபான்மையின மக்களின் நலனில் அக்கறை செலுத்தி அவர்களின் வளர்ச்சிக்காக
மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை முழுமையாக சிறுபான்மையினருக்கு செலவு செய்ய
ஏற்ற வகையில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மிக விரைவில் தொடங்கப்பட உள்ளதாக முதல் அமைச்சர் ரெங்கசாமி அவர்களுக்கு அறிவித்துள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறது.மாவட்ட புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்கள் 7 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளதால், புதுச்சேரி மாநிலத்தில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி அரசு வழங்கியுள்ள 2 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள ஒதுக்கீட்டை PCS அதிகாரிகள், Superintendent, Assistant உட்பட அனைத்து குரூப் A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி புதுச்சேரி அரசை கேட்டு கொள்கிறது.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 57 மீனவர்கள் அவர்களது 7 படகுகளுடன் கைது இலங்கை அரசு கைது செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டெடுக்க வேண்டும். மேலும், தமிழக மீனவர்களை சுடுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்று பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசியது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர், ஒளிபதிவாளர் மற்றும் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்த துணிந்துள்ள பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்பினரை வன்மையாக கண்டிக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்கள் ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அறிய வருகிறது. எனவே, புதுவை இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் புதுவை வக்ஃப் வாரியத்தை தனியாக பிரிக்கவும், மேலும் வக்பு சொத்துகளை பாதுக்காக்க முத்தவல்லிகள், ஜமாத்தார்கள் மற்றும் த.மு.மு.க உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் கொண்ட ஒரு குழுவை புதுவை மாநிலம் முழுவதும் அமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி புதுச்சேரி அரசை கேட்டு கொள்கிறது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஒரு முதலுதவி ஆரம்ப சுகாதார நிலையமாகவே செயல்பட்டு வருவதால் அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தொடர்ந்து தஞ்சாவூர் அல்லது புதுச்சேரிக்கு அனுப்பப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள CT Scan மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் செயல்படுத்த தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மேலும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளில் மருந்துகளே இல்லாத அவல நிலை, அதனை போக்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருந்துகளை வாங்கி வைக்க வேண்டும். அதுபோல் புதுச்சேரி அரசு அமல்படுத்தி வந்த ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது, அந்த திட்டத்தையும் உடனே தொடரவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி தொடர் போராட்டங்களை (வரி கொடா போராட்டம்) மிக விரைவில் அறிவிக்க உள்ளது.
காரைக்கால் வாஞ்சூரில் இயங்கி வரும் மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்கப்பட்டு அவை வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. நிலக்கரியினால் சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கேன்சர் நோய் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக அறிய வருகிறது. இதனால் காரைக்கால், நாகப்பட்டினம் நாகூர், திட்டச்சேரி, உட்பட சுற்று வட்டார பகுதி மக்கள் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, மத்திய மாநில அரசுகள் மார்க் துறைமுகத்தில் நிலக்கரிகளை இறக்க தடை விதிக்க வேண்டும்
புதுச்சேரி மாவட்டத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரும் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் பாஸ்போர்ட் மனுக்களின் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்டவர்கள் அந்த விலாசத்தில் இல்லை என்று தவறான தகவல் அளித்து திருப்பி அனுப்பப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளனர். எனவே, புதுச்சேரி அரசு இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதுபோல் காரைக்கால் பகுதி மக்கள் பாஸ்போர்ட் பெற 300 கிலோமீட்டர் தூரமுள்ள சென்னை செல்ல வேண்டியுள்ளது, காரைக்கால் பகுதி மக்களின் அலைச்சலை குறைக்கும் விதமாக காரைக்காலை ஒட்டியுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே காரைக்கால் பகுதி மக்களும் பாஸ்போர்ட் பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக மனிதநேய மக்கள் கட்சி குரல் கொடுத்து வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.
புதுச்சேரி N R காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதியில்லை என்று கடந்த 6, 7 மாதங்களாக பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களும் போராடி வரும் நிலையில் புதுவையில் 2000 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.






