பட்டா பெயர் மாற்றம் மனு தொடர்பாக
புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட, காரைக்கால் மற்றும் திருநள்ளார் தாலுக்காவில் உள்ள வீடுகள், மனைகள், நஞ்சை மற்றும் புஞ்சைகள் பட்டா முழுமையாக பெயர் மாற்றம் செய்தல், பட்டாவை பிரித்து கொடுத்தல் மற்றும் பட்டாவில் திருத்தம் செய்தல் தொடர்பாக கடந்த 2014 ம் ஆண்டு வரை முழுமையான பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக 285 மனுக்களும், பட்டா சப் டிவிசன் செய்வதற்காக 1470 மனுக்களும், பட்டா திருத்தம் செய்ய 55 மனுக்களும் காரைக்கால் சர்வே அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகங்களில் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், நாம் விசாரித்த வகையில் மனு அளித்து, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து, அந்த தொகையை கொடுத்தவர்களுக்கு மட்டுமே பட்டா பெயர் மாற்றம், பிரித்து கொடுத்தல் மற்றும் திருத்தம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தொகை கொடுக்காதவர்களின் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு, சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் அலைகழிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல், கிடப்பில் போடப்பட்டுள்ள 1810 மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பட்டா பெயர் மாற்றம், பிரித்து கொடுத்தல் மற்றும் திருத்தம் செய்து கொடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வலியுறுத்தப்பட்ட நிலையில், திடீரென கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள 1810 மனுக்களையும் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு திருப்பி அனுப்பும் பணியினை காரைக்கால் மற்றும் திருநள்ளார் பகுதி வருவாய் துறை செய்து வருவது கண்டிக்கத்தக்க செயலாகும். மேலும், மக்களை அலைகழித்து ஏமாற்றும் செயலாகவும் உள்ளது.
வருவாய் துறை தங்கள் மேல் உள்ள தவறுகளை தட்டி கழிக்கும் வகையில் மனுக்களை திருப்பி அனுப்பி விட்டு புதிதாக பட்டா பெயர் மாற்றம், சப் டிவிசன் மற்றும் திருத்தம் செய்ய கோரி மனு அளிக்க வலியுறுத்தும் செயல் மூலம், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மனுக்களை கிடப்பில் போட்டு வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை காப்பாற்றும் செயலாகும்.
