அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, June 18, 2015

காரைக்கால் மாவட்டத்தில், கேஸ் சிலிண்டர் விநியோக பிரச்சனை சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளை மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

காரைக்கால் மாவட்டத்தில், வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் கேட்டு பதிவு செய்யப்பட்ட பிறகு காலத்தோடு சிலிண்டரை விநியோகம் செய்யாமல் காலதாமதப்படுத்தி விநியோகம் செய்வது, சிலிண்டரை வீடுகளுக்கு கொண்டு சென்று  விநியோகம் செய்ய கூடுதலாக விநியோக தொகை பெறுவது, சிலிண்டர் கம்பெனிகளிலிருந்து வீடுகளுக்கு நேரடியாக சென்று சிலிண்டர் கேஸ் அடுப்புகளை ஆய்வு செய்ய ரூ.75 தொகை பெறுவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் காரைக்கால் பகுதியில் உள்ள கேஸ் விநியோகஸ்தர்கள் மீது மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்ற 21.04.2015 அன்று மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள், நுகர்வோர் சங்கங்கள், கேஸ் விநியோகஸ்தர்கள் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் நிர்வாகிள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நுகர்வோர்களுக்கு காலதாமதமின்றி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வேண்டும், வீடுகளுக்கு கொண்டு வந்து கொடுக்கும் சிலிண்டர்களுக்கு பில்லில் உள்ள தொகையை மட்டும் கொடுத்தால் போதும், விநியோகம் செய்வதற்கான தொகை என்று தனியாக கொடுக்க வேண்டாம், ஏனெனில் பில்லில் போடப்பட்டுள்ள தொகையிலேயே வீடுகளுக்கு கொண்டு வந்து கொடுக்கும் விநியோகம் செய்வதற்க்கான தொகையும் அடங்கும் எனவும், அதுபோல் கேஸ் சிலிண்டர் அடுப்புகளை ஆய்வு செய்ய கேஸ் கம்பேனியிலிருந்து வரும் நபர்களுக்கு ஆய்வு தொகையாக ரூ.75 நுகர்வோர்கள் கொடுக்க வேண்டுமெனவும், அதுபோல் வரும் ஊழியர்களுக்கு முறையான அடையாள அட்டை விநியோகஸ்தர்களால் கொடுக்கப்பட வேண்டுமெனவும் முடிவு எடுக்கப்பட்டு, இந்த முடிவுகளை மக்களின் பார்வைக்கு படும் வகையில் பலகை வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால், இன்றுவரை இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகளின் தகவல்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு மாறாக வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது கேஸ் சிலிண்டரில் உள்ள விலையை விட கூடுதலாக ரூ.20 முதல் 30 வரை வீடுகளில் வசூல் செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே  வருகிறது.

ஆகவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி 21.04.2015 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளை பத்திரிக்கை வாயிலாக அறிவிக்கவும், மேலும் எடுக்கப்பட்ட முடிவின்படி பொது மக்களின் பார்வைக்கு படும் விதமாக முக்கிய இடங்களின் தகவல் பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP