அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, July 5, 2015

புதுச்சேரி மாநிலத்தில் கட்டாய தலைக்கவசம் அணியும் சட்டத்திற்கு கால அவகாசம் வழங்கவும், நகர மற்றும் கொம்யூன் பகுதிகளில் தலைக்கவசம் அணிய விதிவிலக்கு அளிக்கவும்

புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை .
 
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது அவர்கள் புதுச்சேரி முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

ஜூலை 1 முதல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்று ஜூன் 8 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மரணம் ஏற்படுவதற்கு தலைக்கவசம் அணியாததே காரணம் என்று நீதிபதி என்.கிருபாகரன் கூறியிருக்கிறார். ஜூலை 1 முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 206 ன் படி ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய வேண்டும், பின்னர் இந்திய தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெற்ற தலைக்கவசம் வாங்கியதற்கான ரசீதை காண்பித்தபிறகு ஆவணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், தேவை ஏற்பட்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து துண்டு பிரசூரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தமிழக அரசு தலைக்கவசம் அணிவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது, இருந்தும் விழிப்புணர்வு செய்வது மக்களிடம் சென்று அடையவில்லை, எனவே இன்னும் அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மீண்டும் ஒரு முறை நீதிபதி அறிவுறுத்தியுனார். ஆனால், புதுச்சேரி அரசு தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

இந்நிலையில், புதுச்சேரியில் ஜூலை 1 முதல் தலைக்கவசம் அணிவது அவசியம் என்ற அறிவிப்பை புதுச்சேரி அரசு அறிவிக்காத நிலையில், திடீரென, முதல் நாள் (30.6.2015 அன்று) காரைக்கால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் காரைக்காலில் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அன்றைய தினமே கடமைக்கு ஒரு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை நடத்தி மக்களிடம் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிடாத நிலையில் காரைக்கால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்திருப்பத்தின் காரணம் என்ன ? ஏன் இந்த அவரசர அறிவிப்பு ? மேலும், ஜூன் 8 அன்றே அறிவிக்கப்பட்ட தமிழகத்திலேயே  தலைக்கவசம் கிடைக்காமல் விலையும் தாறுமாறாக ஏறியிருந்த நிலையில், ஒரே நாளில் அறிவித்த காரைக்காலில் தலைக்கவசமும் கிடைக்கவில்லை, விலையும் அதிகமாகிவிட்டது.

தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது நல்ல விஷயம் என்றாலும், தலைக்கவசம் அணிவது அவரவர் சொந்த விருப்பமாக இருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமத்தை பறிப்போம் என்று நெருக்கடி கொடுப்பது மக்களிடம் வெறுப்பை உண்டாக்கும் செயலாகும். மேலும், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் உள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களிடம் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்து தலைக்கவசத்தை வாங்கிய ரஷீதை காண்பித்தவுடன் ஓட்டுனர் உரிமத்தை திருப்பி கொடுப்போம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஒருவேளை ஓட்டுனர் உரிமத்தை காவல்துறையினர் தவற விட்டுவிட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது. அதுபோல் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதும், 12 வயதிற்கு குறைவான குழந்தைகள் தலைக்கவசம் இல்லாமல் அழைத்து செல்லலாம் என்பதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், தலைக்கவசம் அணியாமல் சென்றால் உயிர் போய் விடும் என்றால் தலைக்கவசம் இல்லாமல் செல்லும் குழந்தையின் உயிருக்கு யார் பொறுப்பேற்பது.

நகர பகுதிகள் எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாக இருக்கும், நகரப்பகுதிகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது என்பது சாத்தியமில்லை, நகரம் மற்றும் கொம்யூன் பகுதிகளில் 18 வயதிற்கு குறைவான மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவதும், அதிலும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதும் தினந்தோறும் காணக்கூடிய செயலாகும். தலைக்கவசம் அணிந்துதான் செல்லவேண்டும் என்றால் மாணவர்கள் மிக சுலபமாக இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதற்கு வழிவகுக்க கூடியதாக இருக்கும், அதுபோல் தலைக்கவசம் அணிந்து செல்வதால் மிக சுலபமாக கூட்டம் நிறைந்த பகுதிகளிலும், தனியாக பெண்கள் நடந்து செல்லும் பகுதிகளிலும் சங்கிலி திருட்டு போன்ற திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற வழிவகுக்கும். அதுபோல், வீட்டிலிருந்து பக்கத்தில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்வது, மாணவ மாணவிகளை பள்ளிக்கூடத்திருக்கு அழைத்து சென்று விடுவது, திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் மற்றும் இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு மற்றும் அவசர நிமித்தமாக செல்லும் இடங்களுக்கெல்லாம் தலைக்கவசத்தை அணிந்து செல்வதால், அந்த தலைகவசத்தை பாதுகாப்பது மற்றும் கையில் வைத்து கொண்டே அலைவது என்பது மிக கஷ்டமான செயலாகவும்.

ஆகவே, தங்களின் தலைமையிலான புதுச்சேரி அரசு தலைக்கவசம் அணியும் இந்த விஷயத்தில் ஏற்படும் சாதக பாதகங்களை மனதில் கொண்டு, தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து துண்டு பிரசூரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் புதுச்சேரி மாநில மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும், அதுவரை தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனும் உத்தரவை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டுமெனவும், மேலும் தலைக்கவசம் கட்டாயம் அணியும் சட்டத்தை அமல்படுத்தும்போது புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட அனைத்து நகரப்பகுதியிலும், கொம்யூனுக்குட்பட்ட உள்பகுதியிலும் தலைக்கவசம் அணியும் சட்டத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமெனவும் மற்றும் தலைக்கவசங்கள் மிக சுலபமாக கிடைக்க வழிவகுக்கவும், அதற்குரிய விலையை உயர்த்தாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

                                                                   

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP