அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, September 27, 2015

5 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் - மனிதநேய மக்கள் கட்சி நேரில் கடிதம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்களிடமும்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் நிலையை அறிய உண்மை நிலை அறியும் குழுவை அமைத்து,

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும்,

ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிட்டு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்தி

மனிதநேய மக்கள் கட்சி நேரில் கடிதம் கொடுத்தது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் உண்மை நிலையை அறிய உண்மை நிலை அறியும் குழுவை அமைத்து, அதன் அடிப்படையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிட்டு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன் முதற்கட்டமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காரைக்கால் மாவட்டம் முழுவதும் கோரிக்கையை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது,

அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது தலைமையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் M.சந்திரகாசு, A.M.H.நாஜிம், V.M.C.சிவகுமார், P.R.சிவா, மற்றும் P.R.N.திருமுருகன் ஆகியோர்களிடம் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது, இச்சந்திப்பின்போது மாவட்ட துணை செயலாளர்கள் ஷாஜஹான்,  சாதிக் அலி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லியாகத் அலி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்பர்ஷா, மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஹாஜா மெய்தீன், நகர செயலாளர் முஹம்மது சர்புதீன்,  மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சாகுல், இக்பால் உட்பட கட்சியின் நிர்வாகிகள்  உடனிருந்தனர். 

சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது " காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலுருந்தும் மருத்துவ சேவைக்காக ஏராளமான மக்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த காலங்கள் போய், சமீபகாலமாக சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு கூட காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருவதற்கு மக்கள் அச்சப்படும் நிலையில் உள்ளனர். புதுச்சேரியில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் என ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், காரைக்காலில் ஒரே ஒரு அரசு பொது மருத்துவமனைதான் உள்ளது, இந்த மருத்துவமனையிலும்  அவசர சிகிச்சைக்கு உரிய மருந்துகளும் இல்லை, சிறப்பு மருத்துவர்களும் இல்லை, சாதாரண வியாதிக்கு உரிய மருந்துகளும் இல்லை, இந்த நவீன காலகட்டத்திற்குரிய பிரஷர் பார்ப்பது, பல்ஸ் பார்ப்பது, இரத்த அழுத்தம் பார்ப்பது, மூச்சின் தன்மை பார்ப்பது போன்ற பல உபகரணங்கள் இல்லை. நோயாளிகளுக்கு நல்ல கட்டில்களோ, படுக்கை விரிப்புகளோ இல்லை, இருக்கின்ற படுக்கையில் படுத்தாலே வியாதிகள் வரும் நிலை, மருத்துவமனையின் பல பகுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது, மருத்துவமனையின் உள்ளே சர்வ சாதாரணமாக நாய்கள் போன்ற நோய் பரப்பும் பிராணிகள் உலாவுகின்றன, மேலும் பாத்ரூம் மற்றும் டாய்லட் அருகிலேயே நோயாளிகளின் படுக்கை உள்ளது, சமீபகாலமாக பிரேத பாதுக்காப்பு அறையில் உள்ள குளிரூட்டும் உபகரணம் அடிக்கடி பழுதாகி வருவதால் அதில் வைக்கப்படும் மனித உடல்கள் கெட்டுப் பொய் அழுகும் நிலை.  மேலும், மருத்துவத்திற்கு வரும் மக்களை மருத்துவர்களும் மற்றும் ஊழியர்களும் கடுமையான வார்த்தைகளாலும், மன உளைச்சலை உண்டாக்கும் விதத்திலும் பேசுவதாக புகார் வருகிறது, மகப்பேறு பிரிவில் கர்ப்பிணி பெண்களையும், அவர்களுக்கு துணையாக வருபவர்களையும் ஒரு சில ஊழியர்கள் கொச்சையான வார்த்தைகளால் திட்டுவதாகவும் புகார் வருகிறது, மிக முக்கியமாக ஸ்கேன் மற்றும் டெஸ்ட் எடுத்தால் அதன் முடிவுகளை உடனடியாக தெரிவிப்பது இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மேலும், விபத்து போன்ற நிகழ்வின் பொது அவசர சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு கூட முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் தஞ்சாவூர், திருச்சி, சென்னை அல்லது புதுச்சேரிக்கு அவரசரமாக நோயாளிகளை கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை. மருத்துவமனையின் அவல நிலை தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக காரைக்காலில் Multi Speciality மருத்துவமனை கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குண்டான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல், தற்பொழுது மருத்துவ கல்லூரியுடன் கூடிய ஜிப்மர் மருத்துவமனையின் கிளை மருத்துவமனை காரைக்காலில் 100 ஏக்கர் நில பரப்பில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் சிகிச்சைகளே தரமானதாக இல்லை என குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், அதன் கிளை மருத்துவமனையின் செயல்பாடு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும், 100 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை கட்டப்பட வேண்டுமானால் அதற்கு பல கோடிகள் செலவாகும். இந்த மருத்துவ கல்லூரியுடன் கூடிய ஜிப்மர் கிளை மருத்துவமனை வருவதால் மக்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை, ஆனால் மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதால் யாருக்கு லாபம் என்பதை தாங்களே அறிவீர்கள்.

ஆகவே, பல கோடிகள் செலவு செய்து புதிய ஜிப்மர் கிளை மருத்துவமனை கொண்டு வருவதற்கு முன்பு, பல லட்சங்கள் மட்டும் செலவு செய்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் தற்போதைய உண்மை நிலையை அறிய I.A.S அதிகாரி தலைமையில் ஒரு உண்மை நிலை அறியும் குழுவை அமைத்து, அந்த குழுவில் அதிகாரிகள் மற்றும் காரைப்பகுதி சமூக ஆர்வலர்களை உறுப்பினர்களாக்கி, அந்த உண்மை நிலை அறியும் குழுவின் மூலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள்,  செவிலியர்கள், ஊழியர்களிடம் விசாரணை செய்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும், மருத்துகளை வாங்கி கொடுத்தும், மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை நியமித்தும், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்தும் மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும். அதுபோல் நியமிக்கப்படும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு பணிக்கு வராத பட்சத்தில், புதுச்சேரி மாநில மருத்துவ கல்லூரிகளில் அரசு கொடுக்கும் சலுகைகளால் மக்களின் வரிப்பணத்தில் மருத்துவம் படித்த மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மக்களுக்கு சேவை செய்ய மறுப்பதாக கருதி அவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல், ஏழை எளிய மக்களுக்கு விபத்து போன்ற பல்வேறு அவசர சிகிச்சைகள் அளிக்க எதுவாக கொண்டுவரப்பட்டு தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிட்டு திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்தவும் தாங்கள் வலியுறுத்த வேண்டும்.

மேற்கண்ட இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன் முதற்கட்டமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காரைக்கால் மாவட்டம் முழுவதும் கோரிக்கையை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கினோம். அடுத்த கட்ட நிகழ்வாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளோம். ஆகவே, தாங்கள் இது சம்பந்தமாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தாங்கள் எடுக்கும் அனைத்து நல் முயற்சிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்".

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP