மாணவர்களை அலைக்கழிக்கும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் - மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மாணவர்களை அலைக்கழிக்கும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம்
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது வெளியிடும் பத்திரிக்கை செய்தி : தமுமுக
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு SSLC படிக்கும்போது அவர்களுடைய தேசம், குடியுரிமை, வருமானம், ஜாதி ஆகிய நான்கு வகைகளையும் உள்ளடக்கிய (PIC) ஒருங்கிணைந்த சான்றிதழ்களை வழங்குவதற்காக, பள்ளிக்கூடத்திற்கே மனுவை அனுப்பி அதனை மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்து, மாணவர்களின் புகைப்படங்களையும் எடுத்து, பள்ளிக்கூடத்தின் மூலம் வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டு, அதனை வருவாய் துறையினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல், கடந்த வருடமும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ் மனு அனுப்பப்பட்டு, அந்த மனுக்களை மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்து தேவையான ஆதாரங்களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர்களிடம் கையெழுத்து பெற்று மனு பூர்த்தியடைந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் சமர்பித்து, பள்ளிக்கூடத்தின் வாயிலாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சான்றிதழ் பெறுவதற்காக காரைக்கால் வருவாய் துறையில் சமர்பித்து விட்டனர்.
அப்படி பூர்த்தியடைந்த நிலையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய (PIC) ஒருங்கிணைந்த சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்காமல் கணினி பழுதடைந்து விட்டது என்ற காரணத்தை கூறி காலந்தாழ்த்தி, அதன்பிறகு தேர்தல் பணிக்கு வருவாய் துறையினர் சென்றுவிட்டனர் என்ற காரணத்தை கூறி மனுக்களை கிடப்பில் போட்டுவிட்டு, தற்பொழுது மனுக்களை ஆய்வு செய்து கையெழுத்திட்ட கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் மாற்றப்பட்டு புதிய கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை தாசில்தார் வந்துள்ளதால் அவர்கள் அந்த (PIC) ஒருங்கிணைந்த சான்றிதழ்களில் கையெழுத்து இட மாட்டோம் என மனுக்கள் அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த விபரம் அறியாமல் மாணவ, மாணவிகள் PIC சான்றிதழ் கோரி கல்வி நிலையத்திற்கும், வருவாய்துறைக்கும் அலைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் சேர கலந்தாய்வு நாளை (09.06.2016) ஆரம்பிக்கவுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் PIC வாங்காததால் பதினொன்றாம் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகத்தின் இச்செயலால் மாணவர்கள் மன உளைச்ச்ச்ளுக்கு ஆளாகி உள்ளனர்.
காரைக்கால் மாவட்ட வருவாய் துறையின் அலச்சிய போக்கால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதை மனதிற்கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவர்களும், முதல் அமைச்சர் அவர்களும் வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விஷயத்தில் முறையான உத்தரவிட்டு மன உளைச்சலில் தவிக்கும் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
அன்புடன்
(எம்.நைனா முஹம்மது)
மாவட்ட செயலாளர் - மமக