காரைக்கால் தனியார் துறைமுகத்தில் மீத்தேன் இறக்க அனுமதிக்கக்கூடாது
மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் வெளியிடும் பத்திரிக்கை செய்தி :
மத்திய பிஜேபி அரசு மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து, அதனை நிறைவேற்றும் விதமாக மக்கள் அதிகமாக வசிக்கும் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எனப்படும் இயற்கை எரிவாயுவை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது குறித்த அக்கறை சிறிதும் இன்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம் அடியோடு சீர்குலையும் என்ற கவலையும் இன்றி மத்திய அரசு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் முழுக்க ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. மீத்தேன் எடுக்க இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம், இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் மற்றும் கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது, மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும், மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில் கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது, அப்படிக் கலந்தால் தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும். நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும் நிலை ஏற்படும்.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களை பற்றி கவலைப்படாத மத்திய பிஜேபி அரசு காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களை பாதிக்கும் வகையில் காரைக்கால் மார்க் தனியார் துறைமுகத்தில் அபாயகரமான "எல்.என்.ஜி (மீத்தேன்) எரிவாயு கையாளும் திட்டத்தை" கொண்டுவர முயற்சிப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், அதிக காற்றழுத்த நிலையில் மீத்தேன் எரிவாயுவை திரவகமாக டேங்கில் அடைத்து வைப்பது "வெடிக்கும்" தன்மை கொண்டது. ஏற்கனவே, நிலக்கரியால் மாசு ஏற்பட்டு மக்கள் பரிதவிக்கும் நிலையில் மீத்தேன் இறக்குமதி என்பது அபாயகரமான திட்டத்தை கொண்டு வருவது மக்களை பற்றி இந்த அரசுகள் அக்கறை கொள்ளவில்லை என்பதையே எடுத்து காட்டுகிறது. ஒருவேளை மீத்தேன் கசிந்தால் சுற்று வட்டாரத்தில் உள்ள காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதி மக்களுக்கு மூச்சு திணறல், தலைவலி, மயக்கம், வாந்தி, தடுமாற்றம் போன்ற விஷத்தன்மை கொண்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.