நிறுத்தப்பட்டுள்ள காரைக்காலிலுருந்து திருச்சிக்கு மதியம் சென்றுவந்த பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்
தென்னக ரயில்வே கோட்ட மேலாளருக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட மேலாளருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
-----------------------------------------------------------------------------------------
காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் பல ஆண்டுகளுக்கு பிறகு காரைக்காலில் புதிய ரயில்வே நிலையம் கட்டப்பட்டு நாகூரிலிருந்து சென்னை, எர்ணாகுளம், பெங்களூர் மற்றும் திருச்சிக்கு சென்றுவந்த ரயில்கள் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டு மீண்டும் காரைக்காலிலுருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அதன்மூலம் காரைக்கால் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். இதனிடையே, நாகூரிலிருந்து திருச்சிக்கு மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரயிலை காரைக்காலிலுருந்து இயக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் தொடர்ச்சியாக வைத்த கோரிக்கையை ஏற்று திருச்சியிலிருந்து நாகூருக்கு மதிய வேளையில் வந்த பாசஞ்சர் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டு மறுமார்க்கத்தில் மதியம் 2.55 மணிக்கு திருச்சிக்கு சென்று வந்தது.
இந்த மதிய வேளை பாசஞ்சர் ரயிலால் காரைக்கால் பகுதி மக்கள் மட்டுமன்றி தென் மாவட்டங்களிலிருந்து திருநள்ளார் கோயிலுக்கு வரும் பக்தர்களும் பயன்பெற்று வந்தனர். மேலும், இந்த மதிய ரயிலில் அதிகளவில் மக்கள் வருகை தரவும், சென்று வரவும் இருந்தனர். இதன்மூலம் ரயில்வே நிர்வாகத்திக்கு அதிகளவு வருமானமும் கிடைத்து வந்தது.
இந்நிலையில் திடீரென திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு மதிய வேளையில் வந்த பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது, அந்த பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்ட காரணம் கூறிய ரயில்வே நிர்வாகம் அந்த ரயிலை காரைக்கால் பகுதி அதிகளவு மக்கள் பயன்படுத்தவில்லை என்றும், இந்த ரயிலால் வாஞ்சூரில் உள்ள தனியார் மார்க் துறைமுகத்திலிருந்து ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வதற்கு காலதாமதமாகிறது என்றும் கூறியுள்ளது. மேற்கண்ட வருமானம் வரவில்லை என்ற காரணம் முழுக்க முழுக்க பொய்யான காரணமாகும். ஏனெனில், அந்த மதிய வேலை ரயிலை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வந்ததால் ரயில்வே துறைக்கு அதிகளவு வருமானமும் கிடைத்து வந்தது.
உண்மையான காரணம் இரண்டாவதாக கூறிய வாஞ்சூரில் உள்ள தனியார் மார்க் துறைமுகத்திலிருந்து ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வதற்கு காலதாமதமாகிறது என்பதேயாகும். மத்திய அரசும், ரயில்வே துறையும் மக்களை விட தனியார் துறைமுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது கண்டிக்கத்தக்க செயலாகும்.
எனவே, மத்திய அரசும், ரயில்வே துறையும் மக்களின் நலனில் அக்கறை செலுத்தி மக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு திருச்சியிலிருந்து நாகூருக்கு மதிய வேளையில் வரும் பாசஞ்சர் ரயிலை மீண்டும் காரைக்கால் வரை நீட்டித்து மறுமார்க்கத்தில் மதியம் 2.55 மணிக்கு திருச்சிக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
ஒப்பம்
B.ஷாஜஹான்மாவட்ட செயலாளர்