அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 12, 2016

மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை அரசு முறைப்படுத்த வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசும், காவல்துறையும் பல்வேறு வழிமுறைகளை அவ்வப்போது  ஏற்படுத்தி  அதை நடைமுறைப்படுத்தியும்  வருகிறது. இருந்தும், மாணவ, மாணவிகள் வாகன விபத்துகளில் உயிரிழப்பதும், பாலியல் தொந்தரவுகள், ஈவ்டீசிங் மற்றும் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிகழ்வுகள் அரசின் பாதுக்காப்பு திட்டங்கள் முறையாக மாணவ, மாணவிகளுக்கு சென்றடைகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

சமீபகாலமாக, காரைக்கால் பகுதியில் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது, மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகுவது, மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது,  விபத்துக்கு உள்ளாகுவது மற்றும் மாணவிகள் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் வரும்போதும், வீட்டிற்கு செல்லும்போதும் அவர்களை ஒரு சிலர் செல்போன்களில் மாணவிகளை போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதாக புகார் வந்தவண்ணம் உள்ளன.

 ஏற்கனவே, காவல்துறை பெண்கள் அதிகம்  பயிலும் கல்விக்கூடங்களில் காவலர்களை நிறுத்தி பாதுகாப்பை செய்து வருகிறது, அதையும் மீறி ஒரு சில அசம்பாவிதங்கள் நடைபெற்று வருவதும்  தொடர்கிறது.  ஆகவே, புதுச்சேரி அரசும், காரைக்கால்  மாவட்ட நிர்வாகமும் மாணவ, மாணவிகளின் பாதுக்காப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

 மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்துகள், வேன்கள் மற்றும்  ஆட்டோ ரிக்‌ஷாக்களில் பயணம் செய்யும்போது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக பயணம் செய்வதை கண்காணிக்க வேண்டும். வாகனங்களின் மேற்கூரையிலும், படிக்கட்டிலும் பயணம் செய்வதை தடுக்க வேண்டும்.  மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் வேகமாக  செல்வதை தடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது. கல்லூரி மற்றும் பள்ளி முடிந்து செல்லும் மாணவிகள் தனியாக செல்வதை தவிர்த்து சக மாணவிகளுடன் செல்ல வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். மாணவ மாணவிகளுக்கு மொபைல் போன் கொடுத்து அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பள்ளி வாயில்களில்  நின்று கொண்டு மாணவிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு  உளவியல் மற்றும் தன்னம்பிக்கை சம்பந்தமான விஷயங்களை அதிகளவில் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அரசையும், ஆசிரியர்களையும், காவல்துறையையும், பெற்றோரையும் மனிதநேய மக்கள் கட்சி  கேட்டு கொள்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP