புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் படுகொலை! - மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.சி.சிவகுமார் அவர்கள் இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள நிரவியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அவரது திருமண மண்டபத்தைப் பார்வையிட வந்தபோது 6 பேர் கொண்ட கூலிப்படையால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
வி.எம்.சி.சிவகுமார் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்து அரசியலில் ஈர்க்கப்பட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்து, பின்பு திமுகவில் இணைந்து புதுச்சேரி மாநில விவசாயத்துறை அமைச்சராகவும், சட்டமன்ற சபாநாயகராகவும் பணியாற்றி வந்தவர், சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று ரெங்கசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து ரெங்கசாமி தலைமையில் அரசு அமைக்க உதவியவர், அதன் பிறகு அதிமுகவில் இணைந்து சென்ற 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக நிரவி திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
வி.எம்.சி சிவகுமார் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்புடன் இருந்துவந்த நிலையில் இன்று நிரவியில் அவரது காரின்மீது வெடிகுண்டு வீசி பாதுகாவலரை திசைதிருப்பி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் தொடர்ச்சியாக வெடிகுண்டு கலாச்சாரமும், ஆயுதக் கலாச்சாரமும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அமைதி பூங்காவாக திகழும் காரைக்காலில் வெடிகுண்டு கலாச்சாரமும், ஆயுதக் கலாச்சாரமும் பரவுவது பொதுமக்களின் மத்தியில் அச்ச உணர்வை உண்டாக்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற படுகொலை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளது வருந்தக்கூடிய செயலாகும்.
எனவே, புதுச்சேரி அரசு கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து தகுந்த தண்டனை வழங்கவேண்டுமென்றும், காரைக்காலில் முதன்முறையாக உருவாகியுள்ள வெடிகுண்டு கலாச்சாரத்தையும், கடந்த 3 வருடங்களாகப் பரவிவரும் ஆயுதக் கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
