அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, February 20, 2017

நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சி மண்வளத்தை பாதிக்கும் வகையில் மண்ணில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை காரைக்காலில் அழிக்க வேண்டும்...

நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சி மண்வளத்தை பாதிக்கும் வகையில் மண்ணில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை காரைக்காலில் அழிக்க வேண்டும்...

புதுச்சேரி அரசுக்கு .... மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் B.ஷாஜஹான் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு தேவையான அளவு மழை பெய்யாததால், மிகப்பெரிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாயம் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்றும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதை விட மிக முக்கியமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்ற முழுமுயற்சி செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.

நல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிவது மிக முக்கியமானதாகும். சீமை கருவேலமரம்  12 அடி வரை வளரக்கூடியது, அதன் வேர் 175 அடி வரை செல்லக்கூடியது, அதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலைவனமாக மாற்றிவிடுகிறது. நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன. புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவும்  கிடைப்பதில்லை. மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவைகள் பரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. இது வெளிவிடும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன.   

சீமை கருவேல மரத்தின் விஷத்தன்மை பற்றி முழுதாய் அறியாமல் கடந்த 1950 ஆம் ஆண்டு விறகிற்கு பயன்படும் என்று இதன் விதைகள் கொண்டுவரப்பட்டு இங்கே தூவப்பட்டன. கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள்.

மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு அதிகளவு பணம் அரசால் செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அதைவிட மிக முக்கியமானது சீமை கருவேல மரங்களை வெட்டுவது மற்றும் முற்றிலும் ஒழிப்பதே. ஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான உண்மை. அந்த அளவிற்கு இதன் நச்சுத்தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது. கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்தும் உள்ளது.

இந்நிலையில், மனித வாழ்க்கைக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் நிலத்தடி உறிஞ்சி பெரும் கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அதன் வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களுக்கு சென்ற ஜனவரி மாதம் உத்தரவிட்டது. அதன்பிறகு, சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு வேரோடு அழிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

எனவே, நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சி மண்வளத்தை பாதிக்கும் வகையில் மண்ணில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை காரைக்கால் மாவட்டத்தில் முற்றிலுமாக அழிக்கக்கூடிய பணியினை போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும்  என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP