அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, March 19, 2017

மனிதநேய மக்கள் கட்சியின்....... புதுச்சேரி மாநில பொதுக்குழு கூட்டம்

 மனிதநேய மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில பொதுக்குழு கூட்டம் 18.03.2017 அன்று புதுச்சேரி கீர்த்தி மஹாலில் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது,

வரலாற்று சிறப்புமிக்க புதுச்சேரி மாநிலத்தின் முதல் பொதுக்குழு என்பதால் புதுச்சேரி நகர் முழுவதும் மமக கொடிகள் கட்டப்பட்டும், கட்சியின் தலைவர்கள் மற்றும் வீர விழுதுகளை  வரவேற்று வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டு நகர் முழுவதும் புதிய அலையை உருவாக்கி இருந்தன.
 இப்பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் P.அப்துல் சமது, தமுமுக பொதுச் செயலாளர் (பொறுப்பு) P.S.ஹமீது, புதுச்சேரி மாநில பொறுப்பாளர் M.S.அலாவுதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

தலைமை செயற்குழு உறுப்பினர்  யூசுப் எஸ்.பி நீதி போதனை வழங்கினார்.
 மாவட்ட செயலாளர்கள் ஷாஜஹான் (காரைக்கால்), லியாக்கத் அலி (புதுச்சேரி), தமுமுக மாவட்ட செயலாளர்கள்
 அப்துல் ரஹீம் (காரைக்கால்), பலுலுள்ளா (புதுச்சேரி), மாவட்ட பொருளாளர்கள் * காஜா கமால் (புதுச்சேரி),  ராஜா முஹம்மது (காரைக்கால்), தமுமுக காரைக்கால் மாவட்ட பொருளாளர்  ஹாஜா நஜிமுதீன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

முடிவில் புதுச்சேரி மாவட்ட தலைவர் பஷீர் அஹமது நன்றியுரை கூறினார்.
 இப்பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, அப்ஷல் பாஷா, அக்பர்ஷா, ஹாஜா மைதீன், அப்துல் ரசீது  தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அலாவுதீன்,  *சம்சுதீன், அப்துல் காசிம், யூசுப்கான், மெய்தீன், இஸ்மாயில் உட்பட  கட்சியின் தொகுதி செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள், நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இப்பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் "நீர்கரிம வாயுக்கள்" எடுக்க மத்திய பா.ஜ.க அரசு அனுமதி அளித்துள்ளது, ஹைட்ரோ கார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதும், உட்கொள்ளுவதும் மிகவும் ஆபத்தானது. இவை புற்றுநோயை உருவாக்கும். மேலும் சிறுநீரகங்கள், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்கும், சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் நாசகரமான திட்ட மாகும். காரைக்கால் மக்களின் நலனுக்கு விரோதமாக மோடி அரசு அனுமதி அளித்துள்ள இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள புதுச்சேரி அரசுக்கு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் எனவும் இத்திட்டத்தை கைவிட வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு தேவையான அளவு மழை பெய்யாததால், மிகப்பெரிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாயம் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதை விட மிக முக்கியமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்ற முழுமுயற்சி செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும். இந்நிலையில், மனித வாழ்க்கைக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் நிலத்தடி உறிஞ்சி பெரும் கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சி மண்வளத்தை பாதிக்கும் வகையில் மண்ணில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை புதுச்சேரி மாநிலத்தில் முற்றிலுமாக அழிக்கக்கூடிய பணியை  முடுக்கு விட வேண்டுமென புதுச்சேரி அரசசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

3. புதுச்சேரி அரசில் உள்ள மின்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக வசூல் செய்யப்படும் மின்சார வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை கணினிப்படுத்தி சம்பந்தப்பட்ட தலைமை மற்றும் கிளை அலுவலகங்களில் கணினி மையம் ஏற்படுத்தி வசூல் செய்து வருகின்றனர், அதேவேளையில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் மூலம் வசூல் செய்யப்படும் வீட்டு வரி, குடிநீர் வரி, கேபிள் வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளை முறைப்படி இதுவரை கணினிப்படுத்தப்படாமல் உள்ளதால், வரிகள் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் வீட்டு வரி, தண்ணீர் வரி, கேபிள் வரி மற்றும் அனைத்து வரிகளையும் கணினிப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு கணினி பயனீட்டு பட்டியல் அனுப்பியும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பணம் செலுத்த கணினி மையம் ஏற்படுத்தி அந்த மையத்தில் பணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

4. காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்கப்பட்டு இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு புகைவண்டி மற்றும் லாரிகளில் அனுப்பப்படுகிறது, துறைமுகத்தில் இறக்கப்படும் நிலக்கரியை மூடி வைத்தும், அவ்வப்போது நிலக்கரி மீது நீரை இறைத்து அதனால் ஏற்படும் வெப்பத்தை தணிக்க வேண்டும் என்ற உத்தரவையும், அதுபோல் நிலக்கரிகள் வெளியே அனுப்பும்போது அதனை மூடி வைத்து அனுப்ப வேண்டும் என்ற உத்தரவையும் மதிக்காமல் மார்க் துறைமுகம் செயல்படுவது கண்டிக்கத்தக்க செயலாகும், இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் பகுதி மக்கள்களுக்கு பல்வேறு இன்னல்களும், வியாதிகளும் வருவதாக அறிகிறோம். எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் நிலக்கரியை மார்க் துறைமுகத்தில் இறக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் அல்லது இறக்கி வைப்பது மற்றும் அதனை வெளியே அனுப்பும்போது அரசின் உத்தரவுகளை மார்க் துறைமுகம் முழுமையாக கடைபிடிக்கிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகளை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

5. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டு, முன்னாள் ஐஏஸ் அதிகாரி டிஎஸ்ஆர் சுப்ரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, குழுவின் அறிக்கையின் 43 பக்கங்கள் மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் புதிய கல்விக் கொள்கை காவிமயமானதாகவே உள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவற்றின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் இது அமைக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத்த்தை அனைத்து நிலையிலும் கட்டாயமாக்குவதும் இதன் நோக்கமாகும். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பாசிச சங்பரிவார சக்திகள் முன்னேடுக்கும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கல்வி, ஒரே பண்பாடு’ என்பதை நடைமுறைப்படுத்தவே இந்தப் புதிய கல்விக் கொள்கை குலக்கல்வியை ஊக்குவிப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்வது போன்ற அபாயகரமான முடிவுகளுடன் உள்ள இந்தப் புதிய கல்விக் கொள்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இக்கல்வி கொள்கைக்கு எதிராக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, இப் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் முடிவை கைவிட வேண்டுமென  மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

6. நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பை ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு பாரபட்சமாக கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எதிராகவும் செயல்படுவது, தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தும். பிரிவினைவாதிகளை ஊக்கப்படுத்தும் பேரபாயம் கொண்டதாகும்.   எனவே, காலந்தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. சாலைகளில் திரியும் நாய், மாடு, பன்றிகளால் வாகனங்களில்  செல்பவர்கள் ஏராளமானவர்கள் விபத்தில்  பாதிக்கப்பட்டு, பலர் உயிர்களை இழந்தும், பலர் கை கால்கள் ஊனமாகி பல லட்சக்கணக்கில் செலவு செய்து வீட்டிலேயே முடங்கி போய்  உள்ளனர். நாய்கள் பெருக்கத்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தெருக்களில் நடக்க முடியாத சூழ்நிலை. மேலும், பன்றிக்காய்ச்சல் நோய்களால் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. ஆகவே, நாய் மற்றும் பன்றிகளை பிடிக்கவும், சாலைகளில் மாடுகளை திரிய விடுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

8. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடன் அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில், இருக்கின்ற நீரையும் சேமிக்க ஏதுவாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளங்களை தூர்வாரி நீரை சேமிக்கவும் நடவடிக்கை  எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

9. புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட நிதி பற்றாக்குறை என கூறி வரும் நிலையில். அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் தேவையற்ற செலவு செய்வதையும், அரசு வாகனங்களை அரசு அதிகாரிகளின் சொந்த வேலைகளுக்கு முறைகேடாக பயன்படுத்துவதையும் தடுக்கவும், அதிகாரிகளின் வீடுகளுக்கு அரசு வாகனங்கள் அழைக்க செல்லக்கூடாது என சட்டமிருந்தும் அதிகாரிகளின் வீடுகளுக்கு அரசு வாகனங்கள் செல்வதையும், முறையற்ற செலவு செய்வதையும் தடுத்து நிறுத்தவேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.                          
10. சென்ற ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட காரைக்கால் - சீர்காழி ரயில்வே பாதை அமைக்கும் பணியினை துரிதப்படுத்தவும், சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை பகுதி வழியாக புதுச்சேரி மற்றும் காரைக்காலை இணைக்கும் ரயில்வே பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், காரைக்கால் - பேரளம் ரயில் பாதை திட்டத்தை காலதாமதமின்றி முடிக்கவும் வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

11. காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலுருந்தும் மருத்துவ சேவைக்காக ஏராளமான மக்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த காலங்கள் போய், சமீபகாலமாக சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு கூட காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருவதற்கு மக்கள் அச்சப்படும் நிலையில் உள்ளனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு உரிய மருந்துகளும் இல்லை, சிறப்பு மருத்துவர்களும் இல்லை, சாதாரண வியாதிக்கு உரிய மருந்துகளும் இல்லை. மேலும், விபத்து போன்ற நிகழ்வின் பொது அவசர சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு கூட முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் தஞ்சாவூர், திருச்சி, சென்னை அல்லது புதுச்சேரிக்கு அவரசரமாக நோயாளிகளை கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை. எனவே, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

12. புதுச்சேரி அரசின் கீழ் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் வரையறுக்கப்பட்ட தனது பணிகளைச் செய்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சிறு கடனுதவி, காலக்கடன், கல்விக் கடனுதவியை சிறுபான்மையின மக்களுக்கு தருவதற்காக இக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இக்கழகம் அப்பணிகளை செய்வதில்லை. சிறுபான்மையினத்தை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிறு கடனுதவிக்காக  மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கடனுதவி கோரி மனு அளித்தவர்கள் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக அலுவலகத்தை அணுகினால், முறையான பதில் இல்லை. எனவே, சாமானிய மக்களுக்கும் பயன் தரும் வகையில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் செயல்பட வழிவகுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

13. சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு புதுச்சேரி அரசு அறிவித்துள்ள 2 சதவிகித இடஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி 4 சதவிகிதமாக அதிகரித்து தரவும், தற்பொழுது நடைமுறையில் உள்ள 2 சதவிகித இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், குரூப் A மற்றும் B யில் உள்ள வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு முறை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புதுச்சேரி அரசு இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

14. டெல்லி ஜவாஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலைக்கழகத்தில் எம்.பில். பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மனஉறுதியுடனும், போராட்டக் குணத்தோடும் வளர்ந்த முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். "பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.ஹெச்டி மாணவர்களில் சிலர் பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர். இந்தப் படிப்புகளின் சேர்க்கைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது; வாய்மொழித் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது; சமத்துவம் மறுக்கப்படுகிறது' என முத்துகிருஷ்ணன் தனது முகநூலில் பதிவிட்ட ஒரு நாளைக்குப் பின்பு இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. எனவே, ஜே.என்.யூ. வளாகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் இச்சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

15. புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பயில்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு வந்த நிலையில், சில மாநிலங்களில் மாணவர்கள் தகுதித் தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தொழிற் கல்வி நிலையங்களில் அனுமதி பெறும் முறையின் மூலம், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் தொழிற் கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில்வதற்கான வாய்ப்பு குறைந்துவிடும், பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்கள் முழு அக்கறை செலுத்திப் படித்து அதிக மதிப்பெண் பெற்று தொழிற் கல்வி பயில விழையும்போது, அவர்களுக்கென இன்னொரு தேர்வு நடத்தி, அதனைத் தகுதியேற்படுத்தும் தேர்வாக அறிவிப்பது முறையற்ற செயல். எனவே, மத்திய அரசு உடனடியாக 'நீட்' தகுதித் தேர்வு முறையை ரத்து செய்து, புதுச்சேரி மாநில அரசு ஏற்கனவே கடைப்பிடித்து வந்த மாணவர் சேர்க்கை முறையையே மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

16. புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ச்சியாக போராடி வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், பார்களையும் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. எனவே, இத்தீர்ப்பின் அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும், பார்களையும் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

17. புதுச்சேரி மாநிலத்தில் நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகள், உட்புற சாலைகள் மற்றும் கிராம சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அதுபோல் சாக்கடைகள் இடிந்து கழிவு நீர் ஓட முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே, அனைத்து சாலைகள் மற்றும் சாக்கடைகளை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

18. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாமல் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. எனவே, வக்பு சொத்துக்களை மீட்கவும், காலியாக உள்ள காஜியார் பதவிகளையும், முத்தவல்லி பதவிகளையும் தகுதியானவர்களை கொண்டு நிரப்பவும், காலியாக உள்ள வக்பு இடங்களில் வீடில்லா ஏழை எளிய சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும், வக்புபோர்டை இந்து அறநிலைய துறையிலிருந்து பிரித்து தனி துறையாக அமைக்க வேண்டுமெனவும் புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

19. புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் உள்ள காலியான பதவிகளை உடனடியாக நிரப்பவும், அப்பதவிகளை வேலைவாய்ப்பு துறையின் மூலம் நிரப்பும்போது இட ஒதுக்கீடு முறை முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா எனபதை கண்காணிக்கவும், ஏற்கனவே சென்ற ஆட்சியிலும், அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நியமிக்கப்பட்ட தற்காலிக, பகுதி நேர மற்றும் வவுச்சர் சம்பள ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

20. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி புதுச்சேரி மாநிலத்தில் வட்டியில்லா வங்கி துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

21. புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு சித்தா, ஆயுர்வேதிக் மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் இல்லாமல், நோயாளிகளுக்கு நோய்க்கு ஏற்ற மருந்துகள் கொடுக்க முடியாமல் வெளியில் சென்று மருந்தகங்களில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  மேலும், அவசர சிகிச்சைக்குக்குரிய மருந்துகளும் கையிருப்பில் இல்லை. ஆகவே, அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

22. தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை அரசால் கைது  செய்யப்பட்டும், சுட்டு கொல்லப்பட்டும் வரும் நிலையில், மத்திய அரசு மீனவர்கள் மீது அக்கறை இல்லாமல் இருந்து வருவதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

23. புதுச்சேரி, காலாப்பெட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனை வெளிப்புறம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது, வெளியூரிலிருந்து வரும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சமூக விரோதிகளால் பல்வேறு இன்னல்களுக்கு  ஆளாவதாகவும் மற்றும் அங்கு நிறுத்தும் வாகனங்கள் திருடு போய் வருவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுத்து அம்மருத்துவமனை பகுதிகளில் போதிய காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP