காரைக்கால் நகராட்சி, பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை கணினிப்படுத்த வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
++++++
++++++
காரைக்கால் நகராட்சி ஆணையர் ரேவதி அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் நகர செயலாளர் M. முஹம்மது மாசிம் தலைமையில் தமுமுக நகர செயலாளர் G.கமால் ஹுசைன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் A.முஹம்மது பயாஸ், இளைஞரணி மாவட்ட செயலாளர் M.முஹம்மது சர்புதீன், தமுமுக நகர பொருளாளர் H.முஹம்மது சிக்கந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது " 1978
ல் பிரெஞ்சு சட்ட முறையிலிருந்து இந்தியன் சட்ட முறைக்கு பிறப்பு மற்றும்
இறப்பு பதிவு செய்யும் முறைகள் மாறிய பிறகு பிறப்பு மற்றும் இறப்பு
நிகழ்வுகள் ஆங்கிலத்திலேயே பதிவு செய்யப்பட்டு வருகிறது. 1880 ல் இருந்து
பிரெஞ்சில் பதிவு செய்யப்பட்டு வந்த பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகள்
1979 லிருந்து ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் வழங்கப்பட்டு வரும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் மொழியில் உள்ள அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களும் கணினிப்படுத்தி, பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் அனைத்தும் கணினி சான்றிதழ்களாவே வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், காரைக்கால் நகராட்சியில் மட்டும் 1970 லிருந்து மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் கணினிப்படுத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காரைக்கால் நகராட்சியில் 1800 லிருந்து பிறப்பு, இறப்பு மற்றும் திருமண நிகழ்வுகள் பதியப்பட்டு வந்துள்ளன. 1970 க்கு முன்பு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிகழ்கள் கோரப்பட்டால் கையால் எழுதி கொடுக்கப்படுகின்றன. ஒரு சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு கால சான்றிதழ்கள் கோரப்பட்டால் கணினிப்படுத்தி வழங்கப்பட்டு வந்தது, தற்பொழுது திடீரென நிறுத்தப்பட்டு விட்டன.
பல மாநிலங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் கணினிப்படுத்தி வழங்கப்பட்டு வரும் நிலையிலும், புதுச்சேரி மாநிலம் அனைத்து துறைகளிலும் கணினிப்படுத்தி முழு நிறைவு அடைந்து விட்டதாக அறிவித்து அதற்கான நிகழ்ச்சிகளை புதுச்சேரி அரசு நடத்தி வரும் நிலையில், மிக முக்கியமான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை காரைக்கால் நகராட்சியில் இன்னும் கையால் எழுதி கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்தி விட்டு அனைத்து பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகளை கணினிப்படுத்தி, மக்களுக்கு கணினி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.
